×

அகலக்கண்ணு தடுப்பணையில் வெளியேறும் காவிரிநீர்

காரைக்கால், செப்.12: காரைக்கால் அகலக்கண்ணு தடுப்பணையில் வெளியேறும் காவிரி நீரை சேமித்து வைக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அகலங்கண்ணு கிராமத்தில் புதுச்சேரி பொதுப்பணித் துறைக்கு சொந்தமான அகலக்கண்ணு தடுப்பணை உள்ளது. கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீர் அகலங்கண்ணு தடுப்பணையில் தேக்கப்பட்டு, அருகே இருக்கும் 10க்கும் மேற்பட்ட கிராம பாசன இடங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும் இங்கு பொதுப்பணித் துறைக்கு சொந்தமான நீரேற்று நிலையம் செயல்படுகிறது.

இதனிடையே இந்த தடுப்பணை கட்டி பல வருடங்கள் ஆகியதால் தடுப்பணையின் கான்கிரீட் தளம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.4.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தடுப்பணையின் குறுக்கு சுவர், கான்கிரீட் தளம் மற்றும் கான்கிரீட் தடுப்பு கட்டை அமைக்கும் பணிகள், தடுப்பணை கதவுகள் மேம்படுத்துதல் மற்றும் அகலங்கண்ணு கிராமத்தில் இருந்து செட்டிக்கோட்டம் சிற்றேரி வரையிலான இணைப்பு சாலையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 90 சதவீதம் பணிகள் மட்டுமே முடிவடைந்த நிலையில், மேட்டூரில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் வந்ததால் பணிகள் முழுமை பெறாமல் நிறுத்தப்பட்டது. இதனிடையே அணையில் தேக்கி வைக்கப்பட்ட காவிரி நீரானது, தடுப்பணை பலகைகள் போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் நீரானது அணையில் இருந்து வெளியேறி வருகிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து காரைக்கால் கடைமடை விவசாயிகள் சங்க தலைவர் சுரேஷ் கூறியதாவது:

இந்த தடுப்பணையில் 1.20 மீட்டர் அளவுக்கு நீர் தேக்கப்பட்டு அருகே உள்ள கால்வாய் மூலம் வயல்களுக்கு நீர் திறந்து விடப்படுகிறது. கோடை காலம் முன்பே தடுப்பணையில் உள்ள பலகைகள் மற்றும் தடுப்பணை மேம்பட்டு பணிகளை துரிதப்படுத்த பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் ஆற்றில் தண்ணீர் வந்ததால் தடுப்பணை தரைத்தளம் கான்கீரிட் பணிகள் கூட சரிவர முடியாமல் அப்பணிகள் கிடப்பில் உள்ளது. இந்நிலையில் அணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரானது பொதுப்பணித்துணியின் அலட்சிய போக்கால் நீரானது வெளியேறி வருகிறது. சம்பா சாகுபடிக்காக திறந்து விடப்பட்ட காவிரி நீர்,கடலுக்கு நீரானது வீணாக வெளியேறி வருகிறது.இதனால் சம்பா சாகுபடி செய்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.வரும் காலத்தில் அணையில் நீர் தேக்கப்படும் அளவை உயர்த்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

The post அகலக்கண்ணு தடுப்பணையில் வெளியேறும் காவிரிநீர் appeared first on Dinakaran.

Tags : Alakkan barrage ,Karaikal ,Akalakannu ,Barrage ,Akalakannu Barrage ,Dinakaran ,
× RELATED காரைக்கால் ராணுவ வீரர் காஷ்மீரில்...